திருக்குர்ஆன்: சிறந்த திக்ர்




 திருக்குர்ஆன்: சிறந்த திக்ர்


சந்தேகமின்றி, சிறந்த திக்ர் (தியானம்/ஜிக்ர்) வடிவம் என்பது கண்ணியமான திருக்குர்ஆனை ஓதுவதாகும். திருக்குர்ஆன் மனிதகுலத்திற்கு அல்லாஹ்வின் மிகப்பெரும் கொடையாகும். இது நித்திய வழிகாட்டல் நூலாகும். இது ஆன்மீகமானதும் உடல்சார்ந்ததுமான ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகும். இது பொய்மையின் இருளினிடையே உண்மையின் பாதையை ஒளிர்விக்கும் ஒளியாகும். திருக்குர்ஆனில் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய அடியார்களாக வாழும் மனிதர்கள் பின்பற்றுவதற்கான சட்டரீதியான தீர்ப்புகள் அடங்கியுள்ளன. இது ஆசீர்வாதங்கள் மற்றும் நித்திய ஞானம் நிறைந்த நூலாகவும், எச்சரிக்கை செய்பவராகவும், மகிழ்ச்சிச் செய்தி தருபவராகவும் உள்ளது.


திருக்குர்ஆன் ஓதுவது மிகவும் நற்பண்புள்ள செயல்களில் ஒன்றாகும், மேலும் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஓதப்படும் ஒவ்வொரு எழுத்துக்கும், ஒரு அடியார் பத்து நன்மைகளைப் பெறுகிறார். இதைப் பற்றிப் பிடித்துக்கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார். இதைக் கைவிடுபவர் துயரமான வாழ்க்கை வாழ்வார் மற்றும் நரக நெருப்பில் நுழைவார்.


திருக்குர்ஆன் நித்திய ஒளியின் மூலமாகும்: இம்மையிலும் மறுமையிலும். திருக்குர்ஆன் ஓதப்படும் வீடு ஒளிரும் மற்றும் பிரகாசிக்கும். வானத்தில் நட்சத்திரங்கள் பிரகாசிப்பதை நாம் பார்ப்பதைப் போல, வானத்தூதர்கள் அத்தகைய வீடுகளை பிரகாசிக்கக் காண்கிறார்கள். திருக்குர்ஆனைக் கேட்பதில் வானத்தூதர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், மேலும் திருக்குர்ஆன் ஓதுபவருக்கு அருகில் வருகிறார்கள். மேலும், தனது அடியார்கள் தனது வசனங்களை ஓதுவதைக் கேட்பதில் அல்லாஹ்வுக்கு மகிழ்ச்சி. அழகாக திருக்குர்ஆனை உரக்க ஓதுபவரை, 'ஒரு பாடகி அடிமையின் எசமானன் அவள் பாடலைக் கேட்பதை விட' அதிக கவனத்துடன் அவன் (சுப்ஹானஹூ வ தஆலா) கேட்கிறான் (இப்னு மாஜா).


இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிலும் மனிதர்களில் குர்ஆனுடைய மக்களை மற்றவர்களுக்கு மேலாக அல்லாஹ் உயர்த்துகிறான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வுக்கு மனிதர்களில் தனக்கென சில மக்கள் உள்ளனர்." மக்கள் கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே, அவர்கள் யார்?" நபி (ஸல்) பதிலளித்தார்கள்: "அவர்கள் திருக்குர்ஆனுடைய மக்கள்; அல்லாஹ்வின் சொந்த மக்கள் மற்றும் அவனுடைய தேர்ந்தெடுத்த மக்கள் ஆவார்கள்" (இப்னு மாஜா).


திருக்குர்ஆன், குர்ஆனுடைய மக்களுக்காக அவர்களின் கல்லறைகளில் வாதிடவும், மறுமை நாளில் பரிந்து பேசவும் வரும். உலகில் திருக்குர்ஆனை ஓதியும், அதன்படி நடந்தும் வந்தவரின் தலையில் கண்ணியமுள்ள கிரீடம் சூட்டப்படும், மேலும் கண்ணியமுள்ள ஆடை அணிவிக்கப்படும். திருக்குர்ஆன் (பரிந்து பேசி) கூறும்: "இறைவா, இவர்மீது நீ திருப்தி அடைவாயாக." ஆகவே அல்லாஹ் அவர்மீது திருப்டி அடைவான். பின்னர் அவரிடம் கூறப்படும்: "(திருக்குர்ஆனை) ஓதிக்கொண்டே சொர்க்கத்தின் பல நிலைகள் மற்றும் மாளிகைகளில் ஏறிச்செல்." அவர் ஓதிக்கொண்டிருக்கும் வரை, அவர் ஏறிக்கொண்டே இருப்பார். அவருடைய பெற்றோருக்கு உலக மக்கள் எப்போதும் கண்டறியாத விலைமதிப்பற்ற ஆடைகள் அணிவிக்கப்படும், மேலும் சூரிய ஒளியை விட பிரகாசமான ஒளியால் செய்யப்பட்ட கிரீடம் சூட்டப்படும்.


உங்களின் தினசரி 'விர்த்' (தினசரிப் பங்கு)


திருக்குர்ஆனை நம் வாழ்க்கையின் அத்தியாவசிய பகுதியாக ஆக்கிக்கொள்ள வேண்டும், மேலும் முடிந்தவரை அதிகமாக ஓத வேண்டும். தினசரி ஒரு நேரத்தை நிர்ணயித்து, திருக்குர்ஆன் ஓதுவதற்காக ஒதுக்க வேண்டும். ஓதுவதற்கு சிறந்த நேரம் இரவு நேரம், குறிப்பாக இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில். ஓதுவதற்கு மற்றொரு வளமிக்க நேரம், ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் ஆகும்; ஏனெனில், நபி (ஸல்) தனது உம்மத்திற்கு காலையில் வளம் அளிக்குமாறு அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள். இந்த இரண்டு நேரங்களிலும் முடியாதவர்கள், நாளின் வேறு ஏதேனும் ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், ஆனால் அதை உங்களின் நேர அட்டவணையில் சேர்த்துக்கொண்டு, அதன்படி கடைபிடிப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.


ஏதேனும் காரணங்களால், உங்களின் தினசரிப் பங்கை (விர்த்) தவறவிட்டால், அதை ஈடுகட்ட வேண்டும். இது நிலைத்தன்மையுடன் இருப்பதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "யார் தமது இரவுப் பிரிவை (ஓத வேண்டிய பகுதி) முழுவதுமாக அல்லது ஒரு பகுதியை தூக்கத்தில் கழித்துவிட்டு, ஃபஜ்ர் முதல் லுஹ்ர் வரை அதை ஓதுகிறாரோ, அது (அவருக்கான நன்மை) இரவில் ஓதியதாக எழுதப்படும்" (முஸ்லிம்).


நம்பமுடியாத அளவிற்கு பணியில் இருக்கும் நிலையிலும், நபி (ஸல்) தமது விர்த்தை (தினசரிப் பங்கு) முழுமையாக நிறைவேற்றுவதை உறுதி செய்துகொள்வார்கள். ஒருமுறை, 'ஸகீஃப்' குலத்தினரின் ஒரு தூதுக்குழு மதீனாவிற்கு வந்தது. நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள், மேலும் ஒவ்வொரு இரவும் இஷா தொழுகைக்குப் பின் அவர்களுடன் பேசச் செல்வார்கள். ஒரு இரவு, நபி (ஸல்) தாமதமாகச் சென்றார்கள். அவர்கள் காரணம் கேட்டபோது, நபி (ஸல்) கூறினார்கள்: "நான் எனது தினசரிக் குர்ஆன் பாகத்தை முடிக்கவில்லை என நினைவிற்கு வந்தது, ஆகவே அதை முடிக்காமல் பள்ளிவாசலில் இருந்து வெளியேற நான் விரும்பவில்லை" (அபூ தாவூத்).


(ரலி) தோழர்கள் ஏழு நாட்களில் திருக்குர்ஆனின் ஓதுதலை முழுமையாக்குவார்கள் (அபூ தாவூத்). இது சாத்தியமில்லையென்றால், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறையாவது திருக்குர்ஆனை முழுமையாக ஓதுவதை நாம் நோக்கமாகக் கொள்ள வேண்டும் (புகாரி).


திருக்குர்ஆன் அனைத்து திக்ர்களிலும் மிகவும் வலியுறுத்தப்பட்டதாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள், ஆகவே அதில் நிலைத்தன்மை கொண்டிருப்பது முக்கியமானது, மேலும் ஒரு நாள் அல்லது இரவு கூட அதை தவறவிடக்கூடாது.

–இமாம் அந்-நவவி (ரஹிமஹுல்லாஹ்)

Comments